Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மத்தியில் பாஜக ஆட்சி அமைய விட மாட்டோம் - மல்லிகார்ஜூன கார்கே

•On June 6, 2024
mallikarjun-kharge
Share
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மொத்தம் 234 இடங்களை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைப் பெற, இன்னும் 38 இடங்கள் தேவைப்படும் நிலையில், அடுத்தகட்ட திட்டம் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மக்களின் தீர்ப்பு நரேந்திர மோடிக்கு எதிரானது என்றும், இது அவருக்கு தார்மீக தோல்வி என்றும் கூறினார். மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பு என்றாலும், மக்களின் விருப்பத்தைத் தகர்ப்பதில் அவர் உறுதியாக இருப்பதாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்குள் கொண்டு வந்து ஆட்சியமைக்க முயற்சி செய்யலாமா? அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படலாமா? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் ஆலோசனையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தை தொடர்ந்து வெளியே வந்த தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துகொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் என்று கூறினார். மேலும் பாஜக-வின் ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.