தமிழில் ரீமேக் ஆகிறது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. மலையாளத்தில் வெற்றிநடை போட்ட இப்படம், கேரள மாநில விருதுகளை அள்ளிச் சென்றது. தற்போது இத்திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கைப்பற்றினார்.
"கூகுள் குட்டப்பன்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்.
'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர்.
ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.
"கூகுள் குட்டப்பன்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப்பூஜையில் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். 'ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்' சார்பாக கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.
இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதவுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.
தமிழக மக்களுக்கு ஒரு வித்தியாசமான காமெடி கலந்த எமோஷனல் கதை ஒன்று தயாராகி வருகிறது. கண்டிப்பாகத் திரையரங்குகளில் சிரிப்பலைக்கு கியாரண்டி தான்!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
