ஜெயம் ரவி நடிக்கும் 'டிக் டிக் டிக்' பட டீசர்

'நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் படம் 'டிக் டிக் டிக்'. இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அசிஸ், ஆரவ் ரவி, ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.இந்தப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படம். தமிழில் முதன் முறையாக விண்வெளி சம்பந்தப்பட்ட கதையாக இப்படம் தயாராகி வருகிறது.
ஹிதேஷ் ஜபக் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரைப் பார்க்கும் போதே ஒரு வியப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்படுத்தியது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்றால் அதன் உருவாக்கம் ஹாலிவுட் படங்கள் அளவிற்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் கிண்டலடித்துவிடுவார்கள். ஆனால், டீசரிலேயே படத்தை ஹாலிவுட் படம் அளவிற்கு எடுத்திருக்கிறோம் என நம்ப வைக்கிறார்கள். இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதிதாகத் தெரிகின்றன.
தமிழிலும் இப்படி வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போதே பெருமையாக இருக்கிறது. 'டிக் டிக் டிக்' டீசரைப் பார்த்தே திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். நேற்று மாலை யு டியூபில் வெளியான டீசருக்கு இதுவரை 12 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. டீசர் போலவே படமும் வியப்பூட்டும் விதத்தில் இருந்தால் தமிழ் சினிமாவில் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதை இப்போதே சொல்லிவிடலாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇந்தியாவை கெளரவப்படுத்திய கூகுள் !
