கோபாலபுரத்தில் திமுக தலைவரை சந்தித்த திருமாவளவன்!

கருணாநிதி மிகவும் நலமுடன் இருக்கிறார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். விடுதலை சிருத்தைகட்சி தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி.
நான் எப்போதும் எனது பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 17-ம் தேதி அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். ஆனால் அன்று அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குச் சென்றதால் அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே (சனிக்கிழமை) நேற்றிரவு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் சந்தித்த போது திமுக தலைவருடன் பேராசிரியர் அன்பழகனும், மு.க.தமிழரசும் இருந்தனர். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்துவிட்டு நான் கொண்டு வந்த புத்தகம் ஒன்றை அவருக்கு அளித்தேன். அது ‘வியப்புக்குரிய ஆளுமை கலைஞர்’ என்னும் தலைப்பில் அவரைப்பற்றி அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
‘நான் திருமாவளவன்’ என்று என் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து பார்த்தார். நன்றாக என்னை உற்று கவனித்தார். ஏதோ பேசுவதற்கு முயற்சித்து வாயசைத்தார். மேலும், அவரது வலது கையை உயர்த்தினார். நான் அவரது கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் எனது கையை லேசாக அழுத்திப் பிடித்ததை என்னால் உணர முடிந்தது. சில நொடிகள் நான் அவரது முகபாவனைகளைக் கவனித்தேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டதாக என்னால் உணர முடிந்தது.
மு.க.தமிழரசு மற்றும் அவரது உதவியாளர்களும் அந்தக் காட்சியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நானும் பூரிப்படைந்தேன். பின்னர் தலைவர் கருணாநிதியிடம் ‘நான் போய் வருகிறேன்’ என்று சற்று உரத்துக் கூறினேன். அதனைப் புரிந்துகொண்டு என்னை பார்த்தவாறே ‘போய் வாருங்கள்’ என தலையசைத்தார்.
கருணாநிதி மிகவும் நலமுடன் இருக்கிறார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். வழக்கம் போல அவருடைய வாழ்த்து கிடைத்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் ஒரு ‘மகத்தான ஆளுமையின்’ உடல்நிலை குறித்து எனக்குள் நீங்காத ஒரு வலி இருக்கவே செய்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
