Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"7 நாட்கள்" திரைவிமர்சனம்...

On June 5, 2017
sakthi
Share
sakthi சக்தி வாசுதேவன் நீண்ட நாட்கள் பிறகு நாயகனாக நடித்துள்ள படம் 'ஏழு நாட்கள்'. இப்படத்தில் நிகிஷா படேல் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் வி.ஆர். இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். உமா கார்த்திக் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் கதை என்னவென்றால் சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரே பிளாட்டில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடக்கம் முதலே இருவரும் எலியும், பூனையும் போல சண்டை பிடிக்கின்றனர். எப்.எம்.-ல் ஆர்.ஜே-வாக பணிபுரிகிறார் சக்தி. நிகிஷா, பிரபு நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிரபுவின் வளர்ப்பு மகனான கணேஷ் வெங்கட்ராம், சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரபுவின் சொந்த மகனான ராஜுவ் கோவிந்த பிள்ளை, வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ஊர் சுற்றி வருகிறார். ராஜுவ், பெண்கள் விஷயத்தில் விஷேச ஈடுபாடு உடையவர். பல பெண்கள் பின்னால் சுற்றி வருகிறார். இதில் அவர் சுற்றி வரும் பெண்களில் இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். ராஜுவ்வின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார் பிரபு. இந்நிலையில் பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் அந்த மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, ராஜுவ் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று, இந்த பிரச்சனையை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார். இந்நிலையில் பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர் இறந்து போக, அந்த வீடியோ ஆதாரம் சக்தி, நிகிஷா படேல் இருவரில் யாரிடமோ இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது. அந்த வீடியோ ஆதாரத்தை அவர்களிடம் இருந்து மீட்க கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? சண்டைபிடித்து வரும் சக்தி - நிகிஷா படேல் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. மேலும் இப்படத்தில் சக்திக்கு சரியான கதைக்களம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நிகிஷா படேல் கதை ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறார். மற்றொரு நாயகியான அங்கனா ராய், கதைக்கு பக்கபலமாக குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையான நடிப்பை கொடுக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் படம் முழுக்க ஸ்டைலீஷ் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கவுதம். வி.ஆர். ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் சுமார்தான். ஆக மொத்தத்தில் படம் நன்றாக இருக்கிறது. அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்க்கக்கூடிய திரைப்படம் தான் 'ஏழு நாட்கள்'.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.