மங்காத்தா வெளிவந்து 5 வருடங்கள் நிறைவு: 400 அடியில் போஸ்டர் அடித்து தல ரசிகர்கள் அமர்க்களம்

அஜித்துக்கு 400 அடியில் போஸ்டர் அடித்து ஒட்டி மதுரை தல ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
நடிகர் அஜித் தனக்கென்று எந்தவித சுயவிளம்பரமும் தேடிக் கொள்ளாதவர். இதனாலேயே தனக்கென்று இருந்த ரசிகர் மன்றங்களையும் கலைக்கத் துணிந்தவர். இருப்பினும், அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அஜித் படம் வெளியாகும் நாளில் மட்டுமின்றி, ஒவ்வொரு வருடமும் அஜித்தின் படம் வெளியான நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வரிசையில் அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றிப்படமான ‘மங்காத்தா’ படம், நாளையோடு 5 வருடங்கள் நிறைவடைகிறது. இதனை அஜித் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன் ஒருகட்டமாக, மதுரை அஜித் ரசிகர்கள் 400 அடியில் போஸ்டர் அடித்து ஒட்டி அசத்தியுள்ளனர். அதில், ‘மங்காத்தா’ படத்தில் இடம்பெற்ற அஜித்தின் புகைப்படங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
‘மங்காத்தா’ படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அர்ஜுன், பிரேம்ஜி அமரன், அஸ்வின் கக்குமனு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், திரிஷா, அஞ்சலி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் அஜித் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் இப்படத்தில் பெரிதாக பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
