உள்ளாட்சித் தேர்தல் விவகாரம், தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் பழங்குடியினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, உள்ளாட்சித் தேர்தலை 2016 டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், இந்த தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவகாசம் கேட்ட மாநில ஆணையம் இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 26ஆம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வில் நடந்தபோது மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் முழுமையாக வேண்டுமென அவகாசம் கோரியது.
உத்தேச கல அட்டவணை அதையடுத்து உத்தேச கால அட்டவணையை ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.
அதன் பின்னர் வந்த உத்தரவில், 'செப்டம்பர் 18-க்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதன் தீர்ப்புக்கு உட்பட்டு இந்த தீர்ப்பு இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் செப்டம்பர்18ஆம் தேதி கடந்து 15 நாட்கள் ஆனபின்னும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று திமுக சார்பில் அதன் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அதில், நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் இரண்டு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
