ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி பொதுநல வழக்கு

கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது எனவும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
அது போல் மற்றொரு வழக்கில் யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
