அமைச்சர்கள் இனி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்! மோடி புதிய உத்தரவு

அலுவல் ரீதியாக வெளியிடங்களுக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் சொகுசு விடுதிகளில் தங்காமல் இனி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்களை தில்லியிலேயே தங்கும்படி பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரசு வாகனங்களை அமைச்சர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ தவறான வழிகளில் பயன் படுத்தக்கூடாது. மத்திய அமைச்சர்கள் சிலர் அலுவல் ரீதியாக வெளியிடங்களுக்குச் செல்லும்போது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள விருந்தினரை மாளிகையில் மட்டுமே தங்க வேண்டும் என்றும், சொகுசு விடுதிகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். சில மத்திய அமைச்சர்கள் அரசு விருந்தினர் மாளிகையை விட்டு விட்டு சொகுசு விடுதிகளில் தங்குவதாக பிரதமருக்கு தகவல் வருவதால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் யாரும் பொதுத்துறையிடமிருந்து எந்த வித சலுகையோ அன்பளிப்போ வசதியோ பெறக்கூடாது.
மேலும், சில அமைச்சர்கள், தங்கள் துறையின்கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான சொகுசு கார்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இதை தவிர்க்க வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், லஞ்ச ஊழலை சற்றும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
2019-இல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ள மோடி, இதற்காக ஊழலில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வது இல்லை என்றும் ஊழலற்ற அரசு என்ற நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள ஆடம்பரத்தை தவிர்க்குமாறு பிரதமர் தமது அமைச்சரவை சகாக்களிடம் வலியுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமரின் இந்த உத்தரவையடுத்து, சொகுசு கார்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று மத்திய அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
