விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கிறதா பதிவுத்துறை : இதோ புதிய சட்டம் அமல்.

விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுக்கக்கூடாது என்று சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு புதிதாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்-பதிவாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு இதுதான்: "மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான சார்- பதிவாளர்கள் செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.
ஆட்சேபம்: சொத்துக்கள் பரிமாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவித்து, யாராவது மனு கொடுத்தால், அதை ஏற்று பதிவுக்கு வரும் பத்திரத்தை நிராகரிக்க கூடாது. மனுவில், சான்று ஆவணங்கள் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தடை மனு கொடுப்பவருக்கு, குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரவும், ஆட்சேபம் தெரிவிக்கவும், சட்டப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உரிய திருப்தி ஏற்படாத நிலையில் பத்திரங்களை நிராகரிக்க கூடாது.
சொத்தின் மதிப்பு குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தால், உரிய விசாரணை நடத்தி, 47 - ஏ விதிப்படி மேல்முறையீட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதைவிடுத்து, வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது
விற்பனை சான்றிதழ்: கடனில் மூழ்கிய சொத்துக்களை, கடனீட்டு சட்டத்தின்படி வங்கிகள் ஏலம் விடுகின்றன. இதை ஏலத்தில் எடுப்பவருக்கு, விற்பனை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. பதிய மறுப்பதாக புகார் வந்தால், சார்- பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேநேரம், ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது. வருவாய் ஆவணங்களான பட்டா உள்ளிட்ட விஷயங்களை சரிபார்க்க வேண்டும், பொதுமக்களை அலைகழிக்கக் கூடாது.
மனைப்பிரிவு: விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. ஆனால், குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை, விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி, குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. இந்த விஷயங்களில், சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 12ம் தேதிக்கு மட்டும், ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 150 டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், பொது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல், ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டது... இறுதியில் அன்றைய ஒரே நாளில் மட்டும், 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில், 224.26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
