Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வனம் - திரைப்பட விமர்சனம்

On November 27, 2021
1637997991274
Share

எழுத்து இயக்கம் : ஸ்ரீகண்டன் ஆனந்த்,
நடிப்பு - வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அனுசித்தாரா, வேலராமமூர்த்தி.

கதை - புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலைக்கல்லூரியில், திடீரென ஒரு தற்கொலை நிகழ்கிறது. அதனை ஒரு மாணவன் ஆராய ஆரம்பிக்க அதன் பின்னால் மறுபிறவி கதையும், பழிவாங்கும் ஆத்மாவும் இருப்பது தெரிகிறது. அந்த ஆத்மாவின் கொலை வெறியை அந்த மாணவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் கதை.

வித்தியாசமான களங்களில் தன்னை பொருத்திக்கொண்டு அதில் மிளிர்ந்து வரும்
'எட்டு தோட்டக்கள்', 'ஜீவி' பட நடிகர் வெற்றி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிறார். ஆனால் களம் மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதுமா? திரைக்கதையும் அதே அளவு ஈர்க்க வேண்டுமல்லவா. அங்கு தான் பிரச்சனை.

ஒரு கலைக்கல்லூரியில் தான் கதை ஆரம்பிக்கிறது. ஆனால் ஒரு காலேஜுக்கான கொண்டாட்டமோ இளைஞர்களோ அங்கே சுத்தமாக இல்லை. ஒரு திரில் படம் என்ற உணர்வை ஆரம்பத்திலேயே தருகிறோம் என்ற பெயரில் க்ரைம் நாவல் போல் அமைத்திருக்கிறார்கள். நாம் எங்காவது தூர பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு பாக்கெட் நாவலை வாங்கி படிப்போம், அதில் வரும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் போன்ற கதைகளின் திரை அனுபவத்தை அப்படியே தந்திருக்கிறது படம். ஆனால் நாவலாக படிப்பது எல்லாமே படத்திற்கு சரிப்பட்டு வராது என்பதை மறந்து போய்விட்டார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் தற்கொலைகள் அதன் பின்னணியை ஆராயும் மாணவன் என தொடக்கம் மிக சுவாரஸ்யமாக தான் ஆரம்பிக்கிறது. பின்கதையாக வரும் மறுபிறவி கதையும், காடு சார்ந்த மக்களின் வாழ்வும் தான் நிறையவே செயற்கையாக இருக்கிறது.

ஒரு காடும் அதில் இயற்கையை சார்ந்து வாழும் மக்கள், அவர்களை துரத்தும் அரசாங்கம், என்கிற அரைத்த மாவை தமிழ் சினிமா வேண்டுமான அளவு ஆட்டி படைத்த பிறகும் இந்த படத்திலும் அதே கதையை ப்ளாஷ்பேக்காக பார்ப்பது நமக்கு சோர்வையே தருகிறது. அந்தக் கதை நம் மனதில் சுத்தமாக ஒட்டவில்லை நமக்கு பரிதாபமும் தோன்றவில்லை. படத்தின் பிரச்சனை இது தான் இந்த ப்ளாஷ்பேக் சரியாக அமைந்திருந்தால் படம் படு திரில்லாக அமைந்திருக்கும்

வெற்றி அவருக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். வெற்றியை தவிர்த்து படத்தில் வேலா ராமமூர்த்தி, அழகம் பெருமாள் இருவர் மட்டுமே கொஞ்சம் கவர்கிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் படத்தில் ஏனோ தானோவென வந்து போகிறார்கள். அதிலும் இணையத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அனு சித்தாரா படத்தில் சாந்தமாக வந்து போகிறார்.

மறுபிறவி, பழிவாங்கலை தவிர்த்திருந்தால், இந்தக்கதை ஒரு அட்டகாசமான திரில்லராக வந்திருக்கலாம். படத்தின் கதையை சொன்னதில் மேக்கிங்கில் எந்தக்குறையும் இல்லை. படத்தை பிசிறு இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தின் திரில் அனுபவத்தை கூட்டுகிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

படத்தின் திரைக்கதையில் கவனம் காட்டி பிற்பாதியில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல திரில் படமாக வந்திருக்கும். மற்றபடி நீங்கள பாக்கெட் நாவல் படிப்பவர் என்றால் இந்தப்படமும் பிடிக்கலாம். வனம் பாதி மட்டுமே திரில்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.