Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் : பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

On August 28, 2018
3222eba2-4e82-4610-a630-278813e69609
Share
திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது. மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு வரும் ”சின்னக் கலைஞர்” தளபதி மு.க. ஸ்டாலினுக்கு இந்த எளியோன் பப்ளிக் ஸ்டார் துரை. சுதாகர் தன் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக இருந்த கலைஞரின் மகன் என்பதால் இந்த உயர்ந்த பொறுப்பு அவருக்கு கிடைத்திடவில்லை. தற்போது உள்ளங்கையில் வந்து விட்ட இணைய உலகில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறையினர் பலருக்கு இந்த சின்ன கலைஞர் கடந்து வந்த போராட்டங்கள், நெருப்பாறு, பிரச்னைகள் பலவும் தெரியாது என்பதால் அவற்றை இச்சுழலில் நினைவுப்படுத்தி பெருமைப்பட ஆசை கொள்கிறேன். 1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின்.3வது மகனாக பிறந்த இவருக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார். தலைவர் மு.க.ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர். இந்த நிபந்தனையைக் கேள்விப்பட்ட கலைஞர் அவரகள்,ஹூம்.. இனி பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்றவே முடியாது என்று கூறி சென்று விட்டார். இதையடுத்து சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார். தந்தை கலைஞரின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார். கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள். இதை படிப்படியாக இளைஞரணி என்ற பெயரிலான அமைப்பாக வளர்த்து அதை அமைப்புரீதியாகவும் 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. மு.க.ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்து இப்போதும் தழும்புகள் உள்ளது. சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது. அப்போது பொதுச் செயலாளர் அன்பழகன் ஒரு போட்டி வைத்தார்... அதாவது புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார். இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார். 02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார். 1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடை போட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கலைஞர் கருணாநிதி பதிலளித்தார். இப்படி அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் தலைவர் கலைஞர். அதிலும் ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார். சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும். மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது. இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சின்னக் கலைஞர் ஸ்டாலினின் வளர்ச்சியை பொறுக்காத அப்போதைய அரசு 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின். பின்னர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி. ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்தார் ஸ்டாலின். இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின். தந்தை கலைஞரைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது. இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். இந்த அனுபவமே சின்னக் கலைஞரைப் பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது. 1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன. 1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது. தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வந்தார்ர். நெல்லையில் இளைஞரணி யின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம். ஆக.. சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், செயல் தலைவர் என்று உயர்ந்த ஸ்டாலின் அவர்கள் தற்போது திமுக தலைவராக பொறுப்பேற்பதை மனதார வாழ்த்தி அவர் நினைப்பது நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.