Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா...?

On July 12, 2024
ec41edfa-0064-4651-8175-b619300c6984
Share

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஓராண்டாக சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற போகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், விசாரணைக்கான காலக்கெடு குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கேட்டும், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூலை 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார்.

இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை நீட்டிப்பதாக குற்றம்சாட்டினார். எனினும் துஷார் மேத்தாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற போகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

இது ஒரு புறம் எனில், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கிலும் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க போவதாக அறிவித்துள்ளது..

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.அந்த விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே இந்த தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரியிருந்தார்

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது இன்று (ஜூலை 12ம் தேதி ) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அல்லி அறிவித்திருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.