Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தப்படத்தில் நான்தான் மெயின். என்னுடைய அப்பாவும், தாத்தாவும் சைடு தான் - நடிகர் விஜயகுமார்

On April 16, 2022
Oh My Dog 1
Share
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்களைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், '2D எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இயக்குனர் சரோவ் சண்முகம், இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், "ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் கருவை தயார் செய்துவிட்டு இதை யார் தயாரித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிறகு 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை சந்தித்தேன். கதையை கேட்டு உடனே சம்மதம் சொன்ன அந்த தருணம் மறக்க முடியாதது. அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்ததே ஆசீர்வாதமாக நினைக்கிறேன். அவரிடம் கதையை சொன்னபோது, அவர்தான் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து சமூக வலைதளப் பக்கமொன்றில் அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய்யுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த சூர்யா சார் . 'ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யை சந்தித்து கதையைச் சொல்லுங்கள். அவர்கள் நடிக்க சம்மதம் என்றால் இந்த படத்தை தயாரிக்கலாம்' என்றார். அருண் விஜய்யை சந்தித்து கதை சொன்னவுடன் அவரும் ஆர்ணவ்வை அறிமுகப்படுத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு அவரிடமே கெஞ்சி கூத்தாடி இந்த படத்தில் நீங்களும் உங்கள் அப்பாவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒப்புதல் கொடுத்ததால்தான் இந்தப் படம் எவ்வளவு பிரமாண்டமாகவும், தரமாகவும் உருவானது. இதனை ஒரு சர்வதேச தரத்திலான குழந்தைகளுக்கான படைப்பாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆர்ணவ்விற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், சண்டைப்பயிற்சி இயக்குநர் செல்வா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா என ஒவ்வொருவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்கி, இந்த படைப்பை செதுக்கியிருக்கிறார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்." என்றார். அறிமுக குழந்தை நட்சத்திரம் ஆர்ணவ் விஜய் பேசுகையில், "இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் சூர்யா அங்கிளும், ஜோதிகா ஆன்ட்டியும் தேர்வு செய்தார்கள். ராஜா அங்கிள், சிவக்குமார் தாத்தா, சரோவ் அங்கிள் அனைவருக்கும் நன்றி. தாத்தா, அப்பா என இரண்டு பேருடன் என்னுடைய முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதற்காக 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கூட நடித்தவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தை பாருங்கள். அனைவரும் ஆசி வழங்குங்கள் ஆதரவு தாருங்கள்."என்றார். நடிகர் விஜயகுமார் பேசுகையில், "2டி என்ற நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு அண்ணன் சிவக்குமார் தான் மூலக்காரணம். அவர் விதைத்த விதைதான் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது,‘ இது போன்ற அபூர்வமான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது’ என சிவக்குமார் குறிப்பிட்டார். அவரிடம்,‘ இது குழந்தைகளுக்கான படம். இதில் நான் எப்படி சிறப்பாக நடிப்பது? என கேட்டேன். இந்த படத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கண்டிப்பான மிடில் கிளாஸ் தாத்தா கேரக்டரை ஏற்று நடித்து இருக்கிறேன். ‘தாத்தா மகன் பேரன் என்ற மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்து இதற்கு முன் தெலுங்கில் ஒரு படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் இந்தப் படம்தான் தயாராகிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார். உண்மையிலேயே இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அருண் விஜய் கடினமாக உழைத்து இன்று தமிழ் திரை உலகில் நல்லதொரு இடத்தில் இருக்கிறார். அவர் மென்மேலும் வளர்ந்து இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய பேரன் ஆர்ணவ் விஜய் யாரோ சிலரிடம், ‘இந்தப்படத்தில் நான்தான் மெயின். என்னுடைய அப்பாவும், தாத்தாவும் சைடு தான்’ என சொல்லிக் கொண்டிருந்தானாம். அதாவது சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதுதான் சைடு என சொல்லி இருக்கிறான் எதிர்காலத்தில் நன்றாக படித்து, பதவிகள் கிடைத்த பிறகு, கலைத்துறையில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள். சிவகுமாரும் நானும் 1964 முதல் நண்பர்கள். கிட்டத்தட்ட 55 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். சினிமாவுக்கு நல்ல முன்னுதாரணமான குடும்பம் சிவக்குமாரின் குடும்பம். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை பின்பற்றுவார். அந்த ஒழுக்கம் தான் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்." என்றார். நடிகர் சிவகுமார் பேசுகையில், "வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது. 1964ஆம் ஆண்டிலேயே நாங்கள் நண்பர்களாக இருந்தோம். இந்தப்படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா =மகன்= பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விசயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனை போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான். இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான். திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார். இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்த படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார். படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், "என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா-ஜோதிகா ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் அவன் எளிதாக நடித்து விடுவான் என்று நம்பினேன். அவன் செய்யும் சுட்டித்தனங்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் . ஆர்ணவ் விஜய்யுடன் நடித்த சுட்டி குழந்தைகள் அனைவருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பல விசயங்கள் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதொரு நிலையும் இருந்தது. குழந்தைகளையும், நாய்க்குட்டிகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொறுமை வேண்டும். இதற்காக கடுமையாக உழைத்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இயக்குநர் சரோவ் மற்றும் படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தருணத்தில் எதையும் திட்டமிட்டு படமாக்க முடியாது. குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டிகள் அவர்களுக்கான மனநிலையுடன் நடிக்கும் போது அதனை படமாக்கி கொள்ள வேண்டும். அதனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் தான் தூணாக இருந்து செயல்பட்டார் என சொல்லலாம். படப்பிடிப்பு குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பும் இதில் இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். டிஸ்னி படைப்பு போல் ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அதுவும் உலகம் முழுவதும் ‘ஓ மை டாக்’ வெளியாகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.