"ஆண்டாள் என் தாய்" கவிஞர் வைரமுத்து பேட்டி...

ஆண்டாள் என் தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என்று தற்போதைய சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார். நான் இதுவரை திருவள்ளுவர், கம்பர், வள்ளுவர், பாரதியார் பற்றி 13 புத்தகங்கள் எழுதி உள்ளேன். நாயன்மார்களில் அப்பர், ஆழ்வார்களில் ஆண்டாள் ஆகியோரை பற்றியும் ஆய்வு செய்கிறேன். ஆண்டாளின் தமிழை நான் 40 ஆண்டுகளாக சுவாசித்து வாழ்ந்து வருகிறேன். ஆண்டாளின் மூலம் அந்த கால சமூகத்தையும், சூழலையும் பார்க்கிறேன். ஆண்டாளின் வைஷ்ணவத்தைவிட அவருடைய தமிழால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய தமிழை மட்டும் நான் கொண்டாடவில்லை. அவர் பெண்களின் ஆளுமைக்காக முதல் குரல் கொடுத்ததையும் கொண்டாடுகிறேன்.
நான் ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள விஷயங்களைப்பற்றியும் கூறினேன். ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன். கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை.
நான் அவருடைய இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று விரும்புகிறவன். இப்போது முதல் முறையாக பகுத்தறிவாளர்களும் ஆண்டாளுடைய பணியை பாராட்டி இருக்கிறார்கள். நான் எப்போதுமே எனது பணியில் உண்மையாக நடந்து கொள்பவன். இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
