Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி: நான்கு அதிகாரிகள் பணியிட மாற்றம்

On September 11, 2024
0a4f455352a9ca279f497ac3a47845d61725978401495184_original
Share

மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு சென்றார். அங்கு மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை மக்கள் தேடிச் செல்லும் காலம் போய், மக்களை தேடி திட்டங்கள் செல்கின்றன என பேசினார்.

இதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சில இடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

மேலும், மாட்டுத்தாவணியில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் கலந்துரையாடி, பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளைக் கேட்டு, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மக்கள் பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும், இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில குறைகள் இருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று அங்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளோம். இன்று மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்போம். எந்த மாவட்டத்திற்கு போனாலும் ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இங்கும் ஆய்வு நடத்தினோம். என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.